
தைப்பொங்கல் திருநாள் என்பது ஒரு மத சம்பந்தமான திருநாள் அல்ல. மாறாக இது ஒரு தமிழர் திருநாளாகும். அதிலும் தமிழ் உழவர் திருநாள் என்று சொன்னால் மிகையாகாது. உலகம் முழுவதும் மே தினம் என்று தொழிலாளர் தினத்தின கொண்டாடுகின்றனர். இந்த பழக்கம் தோன்றுவதற்கு பல நூறு வருடங்களிற்கு முன்னரே உழவர் திருநாளாக அதாவது விவசாய பெருமக்களின் தொழிலாளர் தினமாக தைப் பொங்கலை கொண்டாடி மகிழ்ந்தனர் நம் தமிழ் மக்கள்.
மே தினம் ஒரு சோகத்தின் பிரதிபலிப்பு. ஆனால் தைப் பொங்கலோ உழைப்பிற்கும் நன்றி செலுத்துதலிற்குமான சந்தோசக் கொண்டாட்டம். சூரியனிற்கு விழா எடுக்கும் பழக்கம் எல்லா நாட்டினரிற்கும், எல்லா மதத்தினரிற்கும் உரிய ஒரு வழக்கமும், பழக்கமும் ஆகும். பண்டைய கிரேக்கர், உரோமானியர், சீனர் என்று பல தரப்பட்ட மக்களும் முக்கிய வழிபாடாக சூரிய வழிபாடு செய்துள்ளனர் என்பதற்கு சரித்திர சான்று உள்ளது. இந்து மதத்தின் உட்பிரிவுகள் ஒன்றில் சூரிய பகவானை முழுமுதற்கடவுளாக வழிபடும் பிரிவும் ஒன்று உள்ளது.
உழவுத்தொழிலிற்கு மிகவும் முக்கியமானது சூரிய ஒளி என்பது விஞ்ஞானம் கண்ட உண்மை. இந்த உண்மையை அன்றே மெய்ஞானத்தினால் உணர்ந்த நம் தமிழ் உழவர் பெருமக்கள் தை மாதம் முதலாம் திகதி சூரிய பகவானிற்கு விழா எடுப்பதை வழக்கமாக்கினர். இந்த முதலாம் திகதியை தெரிவு செய்ததற்கும் காரணம் உள்ளது. சூரிய பகவான் மகர ரேகையிலிருந்து கற்கடக ரேகையை நோக்கி நகரத்தொடங்குவது தை முதலாம் திகதியிலிருந்தே ஆகும். மகர ரேகையிலிருந்து கடக ரேகையை ஆனிமாதக் கடைசி தேதியில் வந்தடைவார். இந்த ஆறு மாதகாலம் உத்தராயண காலம் எனப்படும். பின் ஆடி முதலாம் தேதியிலிருந்து கடக ரேகையிலிருந்து புறப்பட்டு மகர ரேகையை மார்கழி மாத கடைசியில் மீண்டும் வந்தடைவார். இந்த ஆறுமாத காலம் தட்சிணாயன காலம் எனப்படும். மனிதர்களின் ஒரு வருடம் என்பது தேவர்களிற்கு ஒரு நாளாகும். உத்தராயண காலம் பகல் பொழுதும், தட்சிணாயன காலம் இரவுப்பொழுதுமாகும். இந்த பகல் பொழுதின் ஆரம்பமே தை முதலாம் திகதியாகும்.
No comments:
Post a Comment