காதலர் தினம் கொண்டாடப்படுவது சரியா தவறா என்பது பற்றிய வாதங்கள் முன்வைக்கப்படும் இன்றைய காலகட்டத்தில் கவிதைச் சாதனையாளர் பாரதிதாசன் காதலைப்பற்றி கூறியவை பற்றி பார்ப்பது சாலப்பொருத்தம்.
இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த கவிதைச் சாதனையாளர் பாரதி என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. இங்கு அவருடைய அகத்துறைப் பாடல் உள்ளடக்கச் சிறப்புகளைக் காண்போம். பாரதியின் மொத்தப் படைப்புலகில் காதல்பெறும் இடம் சிறியதே; எனினும் சீரியது; குழைவும் கசிவும் கனிவும், பெண்ணை மேன்மைப் படுத்தும் இலட்சியமும் கொண்டது. தமிழ் மரபு காதலைப் பாடுவதுடன் காதலைப் போற்றுவதும் கூட. ‘நிலத்தை விடப் பெரியது, வானை விட உயர்ந்தது, கடலைவிட ஆழமானது’ எனத் தன் காதலைப் பற்றிக் குறுந்தொகைத் தலைவி சொல்கிறாள் (குறுந்.3). இது ஒருவகையில் காதல் உணர்வைப் பெருமைப் படுத்துவது. எனினும் தலைவி கூற்றில் வருவது. பாரதி காதலைப் போற்றியும் வாழ்த்தியும் கூறுவன அவர் கூற்றிலேயே வருவன. காதலின் பெருமையை உரக்கக் கூவிப் பறைசாற்றிச் சொல்வதில் பாரதி ஒரு புதுமையைச் செய்கிறார்.
ஆசைக் காதலைக் கைகொட்டி வாழ்த்துவோம்.
(பாரதியார் கவிதைகள், ப.582)
காதலினால் மானிடர்க்குக் கலவி யுண்டாம்......
ஆதலினால் காதல்செய்வீர் உலகத் தீரே!
அஃதன்றோ இவ்வுலகத் தலைமை யின்பம்!
(மேலது,ப.292)
இவ்வகையில், இடைக்காலத்தில் சில சமயவாதிகளால் தாழ்மைப் படுத்தப்பட்ட பெண்ணின்பத்தை மேன்மைப் படுத்துகிறார் பாரதி. இவையெல்லாம் தமிழ் அகத்துறைக் கவிதை மரபில் இடைக்காலத்தில் நேர்ந்த கோணல்களை நிமிர்த்தப் பாரதி மேற்கொண்ட புரட்சி முயற்சிகள்.
......வானோர்க்கேனும்
மாதரின்பம் போற்பிறிதோர் இன்பமுண்டோ?
(மேலது, ப. 292)
என்கிறார். கடவுளைக் காதல் துணையாகப் பாவனை செய்யும் மரபையும் தாண்டிக் காதலியையே கடவுளாகக் காணும் ஒரு பார்வையை முன்வைக்கிறார்.
காதல் செய்யும் மனைவியே சக்தி கண்டீர்
கடவுள் நிலை அவளாலே எய்த வேண்டும்.
(மேலது, ப.292)
காதலை ஆன்மிகத்துக்குச் சரி இணையாகப் பார்க்கிறார் பாரதி. இந்த அளவுக்குக் காதல் உணர்வின் புதுமையை, இனிமையை, செழுமையை, தூய்மையை வலியுறுத்திப் பாடிய தமிழ்க்கவிஞர் எவருமில்லை.
பாரதி பாடிய காதல் பாடல்கள் முழுமையும் கண்ணனைக் காதலியாகவோ (கண்ணம்மா) காதலனாகவோ பாவித்துப் பாடிய பாடல்களே. இவ்வகையில் ஆழ்வார்கள் வழியில் பாடப்பட்டவையே. ஆயினும் ஆழ்வார் பாடல்களின் இறையுணர்வுத் தீவிரத்தை மட்டுப்படுத்திக் காதலுணர்வுத் தீவிரத்தைத் தம் கவிதையில் மேலும் ஒளிபெறச் செய்திருக்கிறார் பாரதி. அதனாலேயே ‘கண்ணம்மா’வாக்கியிருக்கிறார் கண்ணனை. ‘கண்ணம்மா’ பாடல்கள் சிலவற்றைச் ‘செல்லம்மா’ என மனைவியை விளித்துப் பாடியதுண்டு என அறிகிறோம். ஆக உண்மைக் காதல் அனுபவத்தையே முதன்மைப் படுத்தியும் இறைக்காதல் எனும் பாவனைக் காதல் அனுபவத்தை அதற்கு வலுவான பின்களமாக்கியும் பாரதியின் கவிதைகள் பிறந்தன எனக் கொள்ள முடியும். ‘கண்ணம்மா என் குழந்தை’ எனும் கவிதை ‘பராசத்தியைக் குழந்தையாகக் கண்டு சொல்லிய பாட்டு’ என்ற குறிப்புடன் எழுதியுள்ள கவிதை. இது காதல் கவிதை அன்று; அதே நேரம் பராசக்தியை எந்த இடத்திலும் நினைவுக்குக் கொண்டுவராமல் முழுமையாகக் குழந்தைச் செல்வ இனிமையைப் பாடுவது. பாரதியின் ‘கண்ணம்மா’ பாடல்களும் இவ்வாறே முழுமையான காதல் கவிதைகளாகப் பிறந்தவை. கண்ணம்மா என்ற பெயர்க் குறிப்பு இல்லாவிட்டால் இவை சங்கக் கவிதை போலச் ‘சுட்டி ஒருவர்ப் பெயர் கொளப் பெறாத’ மரபான, நாடக அமைப்பிலான காதல் கவிதைகளே. சங்கக் கவிதைகளுக்குத் துறை அமைப்புத் தரப்பட்டிருப்பது போலவே, தம் கவிதைகளுக்குப் பாரதி, ‘காட்சி வியப்பு’, ‘நாணிக்கண் புதைத்தல்’, ‘குறிப்பிடம் தவறியது’ என்பன போன்ற துறை அமைப்புகளைச் சுட்டிக் காட்டியிருக்கிறார்.
மோனத் திருக்குதடீ - இந்த வையகம்
மூழ்கித் துயிலினிலே.
நானொருவன் மட்டிலும் - பிரிவென்பதோர்
நரகத் துழலுவதோ?
(மேலது, ப.407)
என்ற கவிதை அடிகளில் ‘ஓர்யான் மன்ற துஞ்சா தேனே’ என்ற குறுந்தொகைத் தலைவியின் உணர்வு (குறுந்.5) இங்குத் தலைவனின் உணர்வாகப் பிரதிபலிப்பாகியிருப்பதை உணரலாம்.
...... என்றன்
வாயினிலே அமுதூறுதே - கண்ணம்மா என்ற
பேர்சொல்லும் போதிலே - உயிர்த்
தீயினிலே வளர் சோதியே - என்றன்
சிந்தனையே என்றன் சித்தமே!
(மேலது, ப.51)
இந்தக் கவிதைகள் எல்லாவற்றிலும் பாரதி படைத்த காதலி பெண், சக்தி, அழகு, காதல் எல்லாம் வேறுபாடற்றுக் கலந்தமைந்த படிமம். ஆகவே இந்த வகையான காதல் கவிதை பாரதி படைத்த புதுப்படைப்பு என்றே சொல்லவேண்டும். பாரதிக்குப் பின்னர்ப் பாரதிதாசனும் அவருக்குப் பின்வந்தோரும் பாரதியின் இப்புதுமையைத் தொடரவில்லை எனக் காணமுடியும்.
பாரதியோடு ஒப்பிடும்போது பாரதிதாசன் மிகுதியான காதல் கவிதைகளைப் படைத்துள்ளார். பாரதியின் அகப்பாடல்கள் பின்புலத்தில் இறையுணர்வு கொண்டவை என்றால், பாரதிதாசனின் காதற் பாடல்கள் பல சமூக சீர்திருத்த வலியுறுத்தல் கொண்டவை. சித்தர் பாடல்களிலும் வள்ளலார் பாடல்களிலும் பாரதி பாடல்களிலும் உரத்து ஒலித்த சாதிசமயப் பூசலை ஒழித்தல், மூடநம்பிக்கைகளைக் களைதல், பெண்ணடிமைத்தனத்தை ஒழித்தல் போன்ற சமூக சீர்த்திருத்தக் குரல்கள் பாரதிதாசன் கவிதைகளில் மேலும் மிகுந்த உரத்துடன் ஒலித்தன. ஆகவே அவரது காதற்பாடல்களிலும் அந்த ஒலிகளே எதிரொலிக்கின்றன. காலமாற்றத்தின் விளைவு இது.
காதலுக்குக் குறுக்கே சாதி வேறுபாடு நுழையக் கூடாது; கைம்பெண்ணைக் காதலித்து மணக்கத் தடை கூடாது; குழந்தை மணம் கொடுமையானது என்பன போன்ற கருத்துகள் காதல் கவிதைகளில் வெளிப்படைப் பேச்சாகவே அமைகின்றன. நாடகத்தன்மையில்லாத, கவிக்கூற்றாகவே அமைந்த அக்கவிதைகளில் பாரதிதாசன் உலகோருக்குத் தெரிவிக்கும் அறிவுரையாக, எச்சரிக்கையாக, கண்டனமாக இக்கருத்துகள் கூறப்படுகின்றன.
காதல் அடைதல் உயிரியற்கை - அது
கட்டில் அகப்படும் தன்மையதோ - அடி
சாதல் அடைவதும் காதலிலே - ஒரு
தடங்கல் அடைவதும் ஒன்று கண்டாய்.
(பாரதிதாசன் கவிதைகள்,ப.51)
எனத் தலைவன் கைம்பெண்ணான தன் தலைவியோடு சேர்ந்து சமூகக் கட்டுத் திட்டத்தை மீறுகிறான். குறுக்கே நின்ற பெற்றோரை எதிர்க்க வலுவில்லாத ஒரு காதல் இணை தற்கொலை செய்து கொள்கிறது. காதலித்தது தவறு எனத் தடுக்கப்பட்ட போது ஓர் இளம் விதவை நியாயம் கேட்கிறாள்.
பேடகன்ற அன்றிலைப்போல் மனைவி செத்தால்
பெருங்கிழவன் காதல்செயப் பெண்கேட் கின்றான்
வாடாத பூப்போன்ற மங்கை நல்லாள்
மணவாளன் இறந்தால் பின் மணத்தல் தீதோ?
(மேலது,ப.60)
விதவை மறுமணம் என்பது பாரதிதாசன் காலச் சமூகத்தில் நினைத்துப் பார்க்க முடியாதது. புதுமைப்பித்தன், கு.ப.ரா. போன்றோர் சிறுகதைகளிலும் இச்சிக்கல் எதிரொலிக்கிறது. மேலே நாம் கண்டது போன்ற பாரதிதாசன் கவிதைகள் ‘காதல்’ என்ற பொதுத் தலைப்பில் அடங்குவன. ஆனால் காதல் உணர்வை விடக் காதலுக்கு இடையூறாக நிற்கும் சமூகத் தடை பற்றியே மிகுதியாகச் சொல்கின்றன. இவ்வகையில் ‘அகம்’ என்பது ‘புறத்’தின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்ட நிலையை இக்கவிதைகள் தெரிவிக்கின்றன. அதாவது அகக்கவிதை சமூகக் கவிதையாகிறது.
வேறொரு வகையில் அகக்கவிதை ‘குடும்பக் கவிதை’ ஆவதையும் பாரதிதாசனிடம் காணலாம். குழந்தைப் பேறில்லாத மனைவி தொடர்பாகக் கணவனுக்கு ஏற்பட்ட மனக்குழப்பம், அவன் கண்ட கெட்டகனவு, விழித்தபின் அவளிடம் காட்டும் அன்பு-இவை ஒரு கதைக்கவிதையாகியிருக்கின்றன. (மேலது,பக்.150-158). ‘மணவாளனைப் பறிகொடுத்த மங்கை அழுகிறாள்’ எனும் கவிதையும் (மேலது,ப.378) காதல் கவிதையாகவே காட்டப்படுகிறது.
இவை அல்லாமல் வழக்கமான, அல்லது மரபான போக்கில் அமைந்த காதல் கவிதைகளும் பாரதிதாசன் படைத்திருக்கிறார்.சங்கக் கவிதைகள் மூன்றைச் சற்றே நடை மாற்றி வழங்கியிருக்கிறார் (மேலது,பக்.156-157). அவை தலைவன், தலைவி, தோழி கூற்றாக நாடகப் பாங்கில் அமைந்தவை.
சிறுகொம்பு பெரும்பழம் தாங்குவது போலேஎன்
சிறியஉயிர் பெருங்காதல் தாங்குவ தாலே
மறத்தமிழன் விரைவில் வராவிடில் உடலில்
மளுக்கென்று முறியும் என் ஆவி மண்மேலே.
(மேலது,ப.365)
எனக் குறுந்தொகைப் பாடலில் வரும் உவமையை (குறுந். 18) அப்படியே எடுத்தாண்டுள்ளார்.
பாரதிதாசனின் காவியங்களிலும் கதைக் கவிதைகளிலும் கதை மாந்தர்களின் காதல் விரிவாக இடம் பெற்றிருக்கிறது.
கண்ணின் கடைப்பார்வை காதலியர் காட்டிவிட்டால்
மண்ணில் குமரருக்கு மாமலையும் ஓர் கடுகாம்.
(மேலது,ப.4)
என்று ‘சஞ்சீவி பர்வதத்தின் சாரல்’ என்ற குறுங்காவியத்தில் தலைவி மீது தலைவன் கொண்டுள்ள ஆர்வக் காதலைப் பாரதிதாசன் வெளிப்படுத்துகிறார். ‘புரட்சிக் கவி’ எனும் குறுங்காவியம், மன்னன் மகளுக்கும் ஒரு கவிஞனுக்கும் இடையே தோன்றிய காதலைத் தடுத்த மன்னனைப் பொதுமக்கள் எதிர்த்துப் போராடிக் காதலர்க்கு வெற்றி தேடித்தந்த கதை. வேறு சில காவியங்களிலும் இந்த மாதிரி அமைப்பைக் காணலாம்.
பாரதிதாசனுக்குப் பின்னர் அவர் வழியில் முடியரசன், வாணிதாசன், சுரதா, தமிழ்ஒளி, கண்ணதாசன், முருகு சுந்தரம், தமிழன்பன் போன்ற பல கவிஞர்கள் பாரதிதாசன் பரம்பரைக் கவிஞர்கள் என அறியப்பட்டனர். காதல், இயற்கை, சமூகம் எனத் தலைப்புப் பிரித்து எழுதும் பாணி அவர்களையும் தொற்றியது. அதனாலேயே அக்கவிதைகளில் தனித்தன்மை வற்றிப் போனது. அவர்களுள் கண்ணதாசனின் குரல் சற்று வேறுபாடானது. பெண்ணின்பத்தையும் மதுவின்பத்தையும் மனத்தடையின்றி மிகுதியாகப் பாடியவர் அவர். முத்தொள்ளாயிரம், நளவெண்பா, நற்றிணை ஆகியவற்றில் உள்ள அகப்பாட்டுகளை விளக்கிக் கூறும் கவிதைகளையும் இவர் படைத்துள்ளார்.
கையகம் தொட்டும் மெய்யகம் தொட்டும்....
இட்டுப் பிணைத்தும் ஈந்தனன் முத்தம்!....
காதல் பாதியில்
நின்றதே! அடியே! நிறைந்த காமம்
பொங்கும் வேளை போனது கனவேயாம்.
(கண்ணதாசன் கவிதைகள், தொகுதி 1,2, ப.16)
இது முத்தொள்ளாயிரம் 99ஆம் பாடலைத் தழுவி எழுதியது. கண்ணதாசன் கவிக் கூற்றாகவே காதல்/காமச் சுவை மிகுந்த கவிதைகள் பல எழுதியுள்ளார். நிலையாமையைச் சுட்டிக் காட்டியும், கடவுள் படைப்பு இன்பம் அனுபவிப்பதற்காகவே என வற்புறுத்தியும் ஒருவகைத் தாந்திரிகத் தத்துவத்தைத் தம் படைப்புகளில் விரவியிருக்கிறார். காம உணர்வையும் பாலுறவையும் சிற்றின்பம் என்று சமயவாதிகள் சிலர் வெறுத்துரைத்ததற்கு மறுப்பாக அமைவன கண்ணதாசனின் காதல் கவிதைகள். ஆனால் அம்மறுப்பைத் தெரிவிக்கும் விதத்தில் பாரதியின் மென்மை நோக்கிலிருந்து விலகி விடுகிறார் கண்ணதாசன்.
என்னை
தாங்க அழைத்திட்ட விருந்து! - சிறு
கொடியாகிய இடைமேலதன் எடைமீறிய படைவீடுகள்
பார்த்ததும் நான்கொஞ்சம் மிரண்டு - நெஞ்சம்
மருண்டு - கண்கள்
இருண்டு ......
மதுவையோர் கையில் வைத்து
மங்கையோர் புறத்தே வைத்தால்
எதுவரை உலகம் போகும்
எங்கெங்கோ போகும் நானும்
அதுவரை போவேன் .....
(மேலது, ப.122)
இந்தவகைக் கவிதைகளில் கண்ணதாசனே பாத்திரம்! இவ்வாறு தமிழ் அகமரபில் நாயக-நாயகி பாவத்திற்குப் பின் தன்னையே கவிஞன் தலைவனாக்கிக் கொள்வதைக் கண்ணதாசனிடம் பார்க்கிறோம். அகத்துறை மரபின் மென்மையும், நுண்மையும், நாடக அமைப்பு முறைகளும் கண்ணதாசனிடம் சற்றுச் சிதைவு கொண்டன என்றே முடிவுசெய்ய வேண்டியுள்ளது.